செவ்வாய், 18 செப்டம்பர், 2007

பற்றி எரியும் தங்கர் பச்சான் மீது கொஞ்சம் தண்ணீர்

மூன்றாண்டுகளுக்கு முன்பு சென்னை ஏவிஎம் படபிடிப்பு வளாகத்தில் நெறியாளுனர் தங்கர்பச்சானின் ஒன்பது ரூபாய் நோட்டு படத்தின் ஆரம்பவிழா நடைபெற்றது.(யதேச்சையாக எனக்கும் அவ்விழாவில் கலந்துகொள்கிற வாய்ப்பு கிடைத்தது.)

கிராமிய மணங்கமழ ஆடு, மாடுகள், கோழி, வைக்கோல் போர், கயிற்றுக் கட்டில், கலப்பை, நுகத்தடி போன்றவை அங்கு இருந்தன. கேழ்வரகு கூழ், ஊறுகாய் மிளகாய், அரிசிப்புட்டு என்று விழாவிற்கு வந்த அனைவருக்கும் விருந்தளிக்கப்பட்டது. அந்த இடமே ஏதோ ஒரு சிற்றூருக்குள் நுழைந்துவிட்ட ஓர் உணர்வைஅனைவருக்கும் ஏற்படுத்தியது.


சத்யராஜ்-கதாநாயகன், வித்யாசாகர்-இசை என்று ஆரம்பிக்கப்பட்ட அந்தப்படம் அத்தோடு சரி; என்ன காரணங்களாலோ பிறகு மறக்கப்பட்டது. தமிழ்த்திரையுலகின் முதல் trend setter, இயக்குனர் ஸ்ரீதர் அவர்களை விழாவில் நேரில் பார்க்கிற வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது; சக்கர நாற்காலியில் அழைத்து வந்திருந்தார்கள். விழாவை வாழ்த்திவிட்டு கிளம்பிவிட்டார்.

சத்யராஜ், வித்யாசாகர் என படத்தோடு தொடர்புடைய பிரபலங்கள் தவிர பார்த்திபன், சேரன் போன்றவர்களும் வாழ்த்த வந்திருந்தனர்.
"தங்கர் என்படத்துக்கு ஆங்கிலத்துல ஆட்டோகிராஃப்னு தலைப்பு வச்சுட்டதா வருத்தப்படறாரு; அவருடைய ஒன்பது ரூபாய் நோட்டுலகூட ரூபாய், நோட்டுனு ரெண்டு பிறமொழி சொற்கள் வருது, அதை அவர மாத்தச்சொல்லணும்" என்று சேரன் அடிக்கடி பார்த்திபனிடம் விழாவில்
சொல்லிக்கொண்டிருந்தார்.
இச்செய்தி தங்கரின் காதுக்குப் போயிற்றா என்று தெரியாது(?)

இப்படி மாறுபட்ட கோணத்தில் துவக்கப்பட்ட அந்தப்படத்தை அப்படியே அம்போவென போட்டுவிட்டு தங்கர் ஏனோ சிதம்பரத்தில் ஒரு பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கிவிட்டார்.

இப்போதாவது ஒன்பது ரூபாய் நோட்டுக்கு வாழ்வுகொடுக்க மனம் வந்ததே; வாழ்த்தி வரவேற்போம்.
அவ்விழாவில் அன்று என்னை தங்கரிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு அவரது ஒன்பது ரூபாய் நோட்டு நாவலை படிப்பதற்கு அன்பளிப்பாக வாங்கிக்கொண்டு வந்தேன். (அவர் இனாமாக நாவலை எனக்குத் தந்ததின் மேலதிக விவரங்களை பிறிதொரு நேரத்தில் பார்ப்போம்.)
அன்றிரவே அந்நாவலை படிக்க ஆரம்பிக்க... ஆச்சரியம், ஆச்சரியம்... எம்மண்ணின் மைந்தர்களை நேரில் தரிசிப்பது போல் தங்கரின் எழுத்தில் சந்தித்ததில் எனக்கு பிரமிப்பு... இப்படிக்கூட எங்கள் பக்கத்து மனிதர்களைப் பற்றி எழுதமுடியுமா, எழுதினால் படிப்பார்களா, அது இலக்கியமாகுமா? என்று எனக்குள் கேள்விகள் கேள்விகள்.

230 பக்க நாவலை இரண்டே இரவுகளில் படித்து முடித்தேன்.அந்நாவலில் வரும் மாதவப் படையாட்சி போன்று என் சிற்றூரிலும் மனிதர்கள் உண்டு. அவர்களைப் பற்றியும் இப்படி கதையெழுத வேண்டுமென்ற எண்ணமெல்லாம் எனக்கு அப்போது தோன்றியதுண்டு.


புதுச்சேரி மற்றும் தென்னாற்காடு மாவட்டங்களுக்கு என்று தனி வட்டார வழக்கு மொழி (மதுரைத்தமிழ், நெல்லைத் தமிழ், கோவைத்தமிழ் போல) கிடையாது என்றுதான் அந்நாவலை படிக்கும் வரை நான் நினைத்திருந்தேன்.
"தம்பியார நீ மரவெட்ட மாரி செய்யன் பார்ப்போம்" (பக்-48)

''இப்பறமா அவனுவோ கூட கூடுவியா?" (பக்-52)

''முந்திரிக் கொட்டல்லாம் பொறுக்கிட்டு இஞ்ஞம் ரெண்டு மாசங்கழிச்சி போயண்டா, வேணாண்ணா சொல்லப்போறன். குடும்பத்த அஞ்சி நாழியில பிரிச்சிடலாண்டா, ஒண்ணு சேக்கறதுதான் கஷ்டம். இப்ப எனக்கு எஞ்ஞாடா வந்து கெடக்கு?" (பக்-83)''

இவந்தான் பள்ளிக்கொடத்தார் மவனா?" (பக்-217)

மேற்கண்ட உரையாடல்களை ஒன்பது ரூபாய் நோட்டில் படித்தபின்புதான் எம்பகுதி மக்களின் பேச்சு மொழி வழக்கை உண்ணிப்பாக கவனிக்க ஆரம்பித்திருக்கிறேன். இப்படிப்பட்ட மொழி நடையைக் கொண்டு நாவலை நகர்த்தியிருப்பது தங்கரின் இன்னமொரு இலக்கிய வெற்றி என்றுதான் சொல்லவேண்டும்.

தங்கர் என்கிற திரைக்கலைஞனுக்குள் ஓர் அருமையான இலக்கியவாதி ஒளிந்திருப்பதை அன்றுதான் ஒளிவு மறைவின்றி நான் உணர்ந்தேன். அதனால்தான் இயக்குனர் சேரன் "இவ்வளவு அழகாக எழுதுகிற கலைஞன்'' என்று தங்கரைப்பற்றி சொல்கிறார். (ஆனந்தவிகடன் /செப்-19,2007/ பக்-20)

எல்லாம் சரி, இப்படிப்பட்ட போற்றுதலுக்குரிய அந்த நாவலை தங்கர் எப்படி படமாக்கப்போகிறார்?அதுதான் ஒரு லட்சம் டன் கேள்வி?
ஒன்பது ரூபாய் நோட்டின் கதாநாயகப்பாத்திரம், அதாவது மாதவப் படையாட்சியின் வயது கிட்டத்தட்ட அறுபது. அந்த வயதில் ஒரு கதாநாயகன் என்றால் நம்மக்கள் ஏற்றுக்கொள்வார்களா?(அறுபது வயதிலும் இருபது வயது தோற்றத்தில் நாயகனாக வந்தால் ஏற்றுக்கொள்பவர்கள் நாம் என்பது வேறு விஷயம்!)

இரண்டு: கதையின் நாயகனான மாதவப் படையாட்சி பேருந்தில் பயணிப்பதாகவே பாதி கதைக்குமேல் வருகிறது. அதை சிறப்பாக திரைக்கதை அமைத்து அலுப்புதட்டாமல் தங்கர் எப்படி படம்பிடிக்கப்போகிறார்?
படிக்கும்போது சலிப்புதட்டாத இப்பகுதி திரைப்படமாகும்போது பெரிய ஆபத்திருக்கிறது... எழுத்தில் ஒருவன் நல்லவன் என்று சுலபமாக எழுதிவிடலாம். அதையே திரைப்படமாக்கும்போது அதற்கு குறைந்தபட்சம் நான்கு காட்சிகளாவது வைத்து நியாயப்படுத்த வேண்டும்.

மூன்று: இயக்குனர் சேரன் சொல்வதுபோல் (ஆனந்தவிகடன் /செப்-19, 2007/ பக்-21) தங்கர் தன் படத்தை ''சுருட்டாமல்'' எடுக்கவேண்டும். இதனால்தான் படம் பற்றி நமக்கு பயமாக இருக்கிறது...?

"கதையும் தங்கர் தன் உயிரைக்கொடுத்து அதைப்பதிவு செய்யுற விதத்தையும் பார்த்த பின்னாடி, நான் கோவணம் கட்டி நடிக்கிறதுதான் நியாயம்னு பட்டது. சர்வதேசத்தரம்னு சொல்றோம் இல்லையா, அப்படி ஒரு முயற்சிதான் இந்தப்படம்'' என்று நடிகர் சத்யராஜ் சொல்கிற (ஆனந்தவிகடன் /ஆக-15, 2007/ பக்-282) போதுதான் நமக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது.

"நமக்கு அவுட்டோர் ஷூட்டிங்னா பொள்ளாச்சி, காரைக்குடி, ஊட்டி, கொடைக்கானல்னு போய்த்தான் பழக்கம். இப்படியொரு திசை இருக்குன்னே ரொம்பப் பேர் அறியாமல் இருக்காங்க. முந்திரியும் பலாவும் மணக்கிற இந்தப்பூமியின் சரித்திரம் முதன் முதலாகப் பதிவாகிற சந்தோஷம்'' என்று சத்யராஜ் முன்மொழிவது (ஆனந்தவிகடன் /ஆக-15, 2007/ பக்-283,284) தங்கர்பச்சானின் தாய்மண் பத்திரக்கோட்டையை...

"இவரது படைப்புகள் இவரது சொந்த மண்ணில் நன்கு காலூன்றி நிற்கும் எண்ணற்ற பாத்திரங்களை நமக்கு அறிமுகம் செய்துவைக்கின்றன.மண்ணின் மணம் என்று சொல்லுகிறார்களே, அந்தச் சொற்றொடருக்கு இந்த நாவல் இன்னுமொரு விளக்கமாய் அமைந்துள்ளது. பலாவும் முந்திரியும் மாவும் நெடி வீசுகின்றன." இப்புத்தகத்தின் முன்னுரையில் இவ்வாறு முதுபெரும் எழுத்தாளர் ஜெயகாந்தன் குறிப்பிடுகிறார்.

"ஜெயகாந்தன் அவர்களை நினைத்து நான் அடிக்கடி எனது மாவட்டத்துக்காரர், ஊர்க்காரர் என்று பெருமைப் பட்டுக்கொள்வதுண்டு" என்று தங்கரும் தனது என்னுரையில் உருகுகிறார்.

"இதுவரைக்கும் நாவலே இன்னும் தமிழில் வரவில்லை, இனிதான் எந்தப் பயித்தயக்காரனாவது எழுதவேண்டும் என்று நம்முடைய இலக்கிய ஜாம்பவான்கள் சொல்லி பயமுறுத்திக் கொண்டிருந்தாலும் நாம் ஏன் முதல் பயித்தியக்காரனாகக் கூடாது என்பதால் சோர்வையெல்லாம் விலக்கிக்கொண்டு எழுத உட்காருவேன்.'' என்று எழுதும் தங்கருக்கு இந்தநாவலை முழுவதும் எழுதி -முற்றும்- போட இந்த திரையுலகவாழ்க்கையில், அதுதரும் பக்குவமான மனநிலையில் சுமார் பதினொரு ஆண்டுகள் ஆகியிருக்கிறது.

எழுதப்பட்ட இலக்கிய சிறுகதைகள், நாவல்கள் போன்றவற்றை தமிழ்த்திரையுலகம் சீண்டுவதில்லை என்பது பொதுவான குற்றச்சாட்டு. ஆனால், தனது சிறுகதை ஒன்றைத்தான் முதலில் அழகியாக்கிருந்தார்.

நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள் நாவலை சொல்ல மறந்த கதையில் சொன்னவர், தனது களவாடிய பொழுதுகள் சிறுகதையை பள்ளிக்கூடம் படமாக்கியிருக்கிறார், இப்போது ஒன்பது ரூபாய் நோட்டு.
சேரன் சொன்னதுபோல் ரூபாய், நோட்டு போன்ற சொற்களுக்காக, வரிவிலக்குக்காக படத்தின் தலைப்பு மாற வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால், பணத்துக்காக...வெள்ளநிவாரண நிதியாக முன்பு அரசு வழங்கிய இரண்டாயிரம் ரூபாயை குடும்ப அட்டையுடன் வரிசையில் நின்று வாங்கிய வறுமையாளர்தான் இந்தத் தங்கர்.

இதுமட்டுமன்றி "செம்புலம்" என பதிப்பகம் தொடங்கி அதன்மூலம் தன் புத்தகங்களை வெளியிட்டு ராயல்டி சிதறாமல் பார்த்துக் கொண்டவர்தான் இந்தத் தங்கர்.

ஈழத்தின் புலம்பெயர்ந்த தமிழர்களை கருவாகக்கொண்டு, உலகெங்குமுள்ள அந்தத் தமிழர்களிடமே வசூலித்து ஒரு படம் எடுப்பதாகத் திட்டமிட்டார் தங்கர். ஆனால், எம் தமிழர்கள் இப்போது அதிர்ஷ்டசாலிகள்; தற்போது அத்திட்டம் கைவிடப்பட்டதால், தப்பித்துவிட்டார்கள்.

"இப்போ ஒன்பது ரூபாய் நோட்டு படத்தையாவது கெடுக்காமல் எடுங்க, அதுதான் உங்களை வேறு இடத்தில் கொண்டுபோய் வைக்கும்.பள்ளிக்கூடம் மிகச்சிறந்த கதை. ஆனா, கொடுத்த பணத்தைச் ''சுருட்டாமல்" இருந்திருந்தால், அது இன்னும் நல்ல படமா வந்திருக்கும்." -சேரன். (ஆனந்தவிகடன் /செப்-19, 2007/ பக்-21)

ஆனால், 'உள்ளேன் ஐயா' வின் உணர்வுப்பிரதிதான் பள்ளிக்கூடம் என்று உண்மையாளர்களும், தெரிந்தவர்களும் சொல்கிறார்கள்.
''தமிழன் விளங்குவானா சார்?" என்று தங்கர் பச்சானும்,
''நீங்கள் உத்தமரா தங்கர்?" என்று சேரனும் கடந்த இரண்டு வார ஆனந்த விகடன் பரபரபுக்கும் இந்த பச்சைத்தமிழர்கள் ஊறுகாய்ஆகிவிட்டார்கள்.

தங்கரும் சேரனும் ஒண்ணுக்குள் ஒண்ணு என்று ஆனதே சேரன் கதாநாயகனாவதற்குத்தான்; அதை எதிர்பார்த்துதானே சேரனின் நட்பும் பிற்காலத்தில் தங்கருடன் இறுகியது. ஆனால், பள்ளிக்கூடத்திற்கு வரமறுத்ததற்கு சரியான காரணங்களைத்தான் சொல்லியிருக்கிறார்.

இந்த இடத்தில் தங்கர் ஒன்றை கவனிக்கவேண்டும்: சொல்ல மறந்த கதையில் கதையின் நாயகனாக சேரன் என்றுதான் அவரை அறிமுகம் செய்தார். அப்படியிருக்க பள்ளிக்கூடம் படத்திற்கும் ஒரு கதையின் நாயகனையே தேடிப்பிடித்து அறிமுகம் செய்திருக்கலாமே.

சேரனின் ஸ்டார் வேல்யூ தேவைப்பட்டதால்தான், தங்கர் ''தமிழன் விளங்குவானா சார்?" என்று கொதிக்கவேண்டியதாகிவிட்டது.
தமிழ் தமிழ் என்று மூச்சுக்கு மூச்சு கதறும் தங்கர் தனது நேர்காணலில் கால்ஷீட், சார் என்றுதான் பேச்சு வழக்கில் சாதாரணமாக பேசுகிறார்.

தங்கரும் மற்றவர்களைப்போல சேரன், எஸ்.ஜே.சூர்யா என்று (இயக்குநர்களுமான) கதாநாயகர்களின் பின்தான் திரிந்திருக்கிறார். இவர்களாவது ஓர் இயக்குனரின் துன்பத்தை புரிந்துகொண்டு ஒத்துக்கொள்வார்கள் என்று எதிர்பார்த்திருக்கிறார். அவர்களும் இயக்குனர் முகத்தைவிட கதாநாயகன் முகம்தான் பிடித்திருக்கிறது என்று சொல்லாமல் சொல்லிவிட்டார்கள்.

எஸ்.ஜே.சூர்யா இந்த பள்ளிக்கூடம் படத்தின் கதைக்கு சரியாகயிருக்கமாட்டார் என ஒரு இயக்குனராக தங்கருக்கு ஏன் முன்பே தெரியாதா? அப்படியிருந்தும் அவரது ஸ்டார் வேல்யூவிற்காகத்தானே இவர் அவர் பின்னாடி போயிருக்கிறார்.

''பள்ளிக்கூடம்னா தெரியலைங்க இங்கே. ஸ்கூல்ங்கிற வார்த்தை தமிழ் வார்த்தையாகிப் போச்சுங்க." (ஆனந்தவிகடன் /செப்-12, 2007/ பக்-76) என்று வழக்கம்போல ஊருக்கு கதையளக்கிறார். அதுமட்டுமன்றி தனது பள்ளிக்கூடம் படத்தை தானே ஆஹா ஓஹோ என்று புகழ்ந்துகொள்கிறார். அதையும் பார்த்துக்கொண்டு நாமெல்லாம் சும்மாதான் இருக்கவேண்டியிருக்கிறது. அருமையான கதையை பாதிக்குமேல் திரைக்கதையில் தங்கர் சொதப்பி வைத்திருப்பது ஊரறிந்த உண்மை.

அஜயன் பாலா (நா.முத்துக்குமார் கோஷ்டி) போன்ற இணை இயக்குனர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்களோ? ஒருவேளை தங்கர் தான்தான் படத்தின் "இறுதி முடிவாளர்" என சொல்லிவிட்டாரோ என்னவோ?

இயக்கனர் சீமானுக்கு தங்கர் ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடாததால் அவரும் அமைதியாக நடித்துக்கொடுத்துவிட்டு மட்டும் வந்துவிட்டிருக்கிறார்.

மொத்தத்தில் சொல்ல வந்த உணர்வை இன்னும் சுவையாகவும் முழுமையாகவும் பள்ளிக்கூடத்தில் சொல்லவில்லை என்பதுதான் நமது குறை...

தனது படங்கள் வெளிவருகிற நேரத்தில் மட்டுமே ஊடகங்களைத் தேடி ஓடிவரும் சேரன் மற்ற நேரங்களில் ஆமைபோல் ஒளிந்துகொள்கிறவர்; அவரே வெளிவந்து பெருவிரல் காயத்தோடு விளாசுகிற அளவுக்குத் தங்கர் தனது நேர்காணலில் உளறிக்கொட்டிவிட்டார்.

இப்படி இரண்டு தமிழர்களை அவர்களுக்குள்ளாகவே உள்குத்து வேலைகளில் இறங்க இறக்கிவிடப்பட்டிருந்தாலும் சேரன்தான் வாய்மையில் வெல்வதாக கோடம்பாக்கம் சொல்கிறது. மேலுக்கு வருத்தப்படுகிறார்கள் தங்கருக்காக...

இதுபோன்ற தங்கரைப்பற்றிய மேலதிக விவரம் வேண்டுவோர் தொடர்புகொள்ள அவர்கள் கைகாட்டுவது இசைஞானியை...

போதும் தங்கர்... இளையராஜா, குஷ்பு, நவ்யா நாயர் தற்போது சேரன் என்று நீங்கள் நெறியாள்கையாளர் ஆனபிறகு பட்டதெல்லாம் போதும்...

கூர்ந்து கவனித்தால் இதுவரை யாருமே உங்களின் படைப்புகளை பெரிதாக குறைசொன்னதேயில்லை. ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிகளுக்குக் கொண்டாட்டம் என்பார்கள்; நீங்களும் சேரனும் இரண்டுபட்டடால் தமிழகத்தை பொறுத்தவரை இரண்டு வாரயிதழ்களுக்குத்தான் கொண்டாட்டம்.

போனது போகட்டும்; ஒன்பது ரூபாய் நோட்டை அச்சு அசலாய் அச்சடிக்கிற வேலையில் இனியாவது கவனம் செலுத்துங்கள்... வட்டார கலாசாரத்தையும், பண்பாட்டையும் வெள்ளித்திரையில் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து வெற்றிக்கொடி நாட்டுங்கள்.

இனாமாய் வந்த மாட்டை பல்லை புடிச்சி பார்க்கறதுங்கறது இதானா?

ஒன்பது ரூபாய் நோட்டு புத்தகத்தைச் சொன்னேன்...

18 மறுமொழிகள்:

  1. படித்தேன்.ஒரு பின்னூட்டமும் போடமுடியாமல் நகரமுடியவில்லை.

    நன்றி

    பதிலளிநீக்கு
  2. ஊற்று ,

    இந்த ஒன்பது ரூபாய் நோட்டை யார் தயாரிக்கிறார்கள். ஏற்கனவே இந்த படத்தை தயாரிப்பதாக சொல்லி ஆசஸ்கர் பில்ம்ஸ் (இது வேற)பாஸ்கர் என்பவரிடம் படம் எடுக்காமலே 1.5 கோடி வரைக்கும் செலவு வைத்ததாக அவரும் குமுதத்தில் முன்னர் பேட்டிக்கொடுத்தார்.எனக்கு தங்கர் பதில் சொல்லாமல் இதே கதையை படமாக்க விட மாட்டேன் என்றும் சொன்னார். இது தென்றல் படம் எல்லாம் எடுக்கும் முன்னர் நடந்தது.

    தங்கரிடம் நேர்மை இல்லை என்பதை இப்போது சேரன் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. அவரை வைத்து எடுத்த படத்தயாரிப்பளர்கள் அனைவருமே சொல்வது தான் , இதனாலேயே ஒவ்வொரு படம் வரும் போதும் பஞ்சாயத்து நடப்பது வழக்கம்.

    திரைப்பட கல்லூரியில் பி.சி ஸ்ரீராமின் ஜூனியர் தான் இவர் , நிறைய இவருக்கு உதவி செய்துள்ளார், அவரே மனம் வருந்தி ஒரு தடவை இவரது போக்கு சரி இல்லை என பேட்டிக்கூட கொடுத்துள்ளார(ஒருவரைப்பற்றி அவதூறாக அடுத்தவரிடம் பேசுவது).

    இந்த படத்தையாவது கரைசல் இல்லாமல் எடுப்பாரா பார்ப்போம்!
    (appadi enna perisa threat varuthunu word verification)

    பதிலளிநீக்கு
  3. Thangar may be frustrated a lot. He could have good stories and good plan but noone is supporting him. That is why he is blaming everyone. It is sad a talented person is spoiling his talent in bad manner

    பதிலளிநீக்கு
  4. தங்கரின் வாய்கொழுப்பு ஊரறிந்த ஒன்று,தங்கர் கண்டிப்பாக வாயை கட்டுப்படுத்த வேண்டும், தங்கர்-சேரன் பிரச்சினை இன்று தொடங்கியதல்ல, தங்கர்-சேரன் இருவரும் கடுமையாக விமர்சித்து மோதிக்கொண்டு அதன் பின்பு "சொல்ல மறந்த கதை"யில் சேர்ந்தனர், தங்கரின் சுருட்டல் கதைகளை பல முறை கிசு கிசுக்களாக புத்தகங்களில் படித்திருக்கின்றேன், வலைப்பதிவில் கூட ஒரு முறை யாரோ சொன்னார்கள்....

    "தலைகீழ்விகிதங்கள்" கதை சொல்ல மறந்த கதையாக மாறிய போது கதாசிரியர் "நாஞ்சில் நாடன்" அவர்களுக்கு தமிழ்திரைப்பட கதாசிரியர்களும் யாருக்கும் கிடைக்காத சம்பளம் தந்ததாக படித்தேன்... அதை பலரும் அந்த நேரத்தில் பாராட்டியிருந்தனர், அப்படிபட்ட தங்கர் சேரனுக்கு 3 இலட்சம் தந்துவிட்டு 25 இலட்சம் தந்ததாக தயாரிப்பாளரிடம் சொன்னதாக சேரன் குற்றம் சாட்டியது அதிர்ச்சியையே ஏற்படுத்தியது...என்றாலும் தங்கர் செய்திருக்காலாம் என்றே நம்ப தோன்றுகிறது.


    ஒன்பது ரூபாய் நோட்டு மிக அற்புதமான நாவல், அந்த கதை நாயகனையும் மற்றவர்களையும் அச்சு அசலாக என் கண்முன்னே பார்த்திருக்கின்றேன்... கொஞ்சம் கூட ஹீரோயிசமில்லாமல் வீம்பு பிடிக்கும் ஒரு மனிதரை பற்றிய கதை... பார்ப்போம் எப்படி படமாக்குகின்றார் என்று.....

    "ஒன்பது ரூபாய் நோட்டு" என்கிற அந்த தலைப்பே முழுகதையையும் சொல்லிவிடுகிறதே... தலைப்பினுள்ளே கதை அற்புதம்...

    ஒரு அற்புதமான படைப்பாளி ஏன் இத்தனை திமிரும் வாய்கொழுப்பும் எடுத்து ஆடவேண்டும்?

    பதிலளிநீக்கு
  5. மிக நல்ல அலசல்.

    ஆ.வியின் 2 வார பரபரப்பு விற்பனைக்கு காரணமானதைத் தவிர, இவர்களின் சண்டைகள் வேறு எந்த வகையிலும் பார்க்கப் பட வில்லை.

    நல்ல படங்களை தான் எடுப்பேன் என்று சொல்லும் தங்கர், பெரும்பாலும் வாய்க்கொழுப்பினாலேயே வீணாய் போய்க் கொண்டிருக்கின்றார்.

    அஜீத்தை நான் கடவுள் பட விவகாரத்தில் பயங்கரமாய் மிரட்டிய பிரச்சினையில் கூட இவருக்கும் சீமானுக்கும் பங்கு இருப்பதாய் நண்பர்கள் மூலம் கேள்விப்பட்டேன்.

    தமிழ் உணர்வு, என் மண்ணை படமெடுக்கிறேன், எழுத்தாளர், வித்தியாசமான சிந்தனையாளர், என்ற கவசங்கள் தங்கரை பல பிரச்சினைகளிலிருந்து காப்பாற்றி வருகிறது.

    பதிலளிநீக்கு
  6. மறுமொழி எழுதிய நண்பர்கள் தீவு, வவ்வால், வெத்துவேட்டு, குழலி, நந்தா அனைவருக்கும் நன்றிகள், நன்றிகள். தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள்.

    வவ்வால் ஒன்பது ரூபாய் நோட்டின் தயாரிப்பாளர் யார் என விரைவில் சொல்கிறேன்.

    அனைவரின் மறுமொழிகளும் சொல்லும் ஒரே விஷயம் தங்கர் ஒன்றும் உத்தமரில்லை என்பதுதான்.

    இனிமேல் மாறுவார் என்று எதிபார்ப்போம்.....?

    பதிலளிநீக்கு
  7. ஊற்று நல்ல படைப்பு .நல்ல விடயங்களை தேடி எடுத்து எமக்கு தந்தமைக்கு வாழ்த்துக்கள்.தொடர்ந்து எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  8. எனக்கென்னவோ தங்கர்-சேரன் மோதல் பள்ளிக்கூடம் படத்துக்கான பப்ளிசிட்டி ஸ்டண்டாக தெரிகிறது. அழகி வெளியான நேரத்தில் படத்துக்கு பெரிய ஓபனிங் இல்லை. தங்கர் உடனே ஒரு இதழில் (குமுதம்) பேட்டி தந்தார். "இங்கே எவனுக்குமே படம் எடுக்கத் தெரியலை... உலகப்படம் எடுக்கும் முயற்சியை எவனுமே செய்யலை" என்று.

    அடுத்த வாரம் சேரன் பதில் அளித்தார் "அழகி மட்டும் தான் உலகப்படமா? தங்கர் தன் வாயை கட்ட வேண்டும்" என்று.

    தொடர்ந்து இரு இதழ்களில் இவர்கள் மோதிக்கொண்டதுமே மக்களுக்கு இயல்பாக "அழகி"யில் ஏதோ மேட்டர் இருக்கு போல' என்ற ஆர்வம் ஏற்பட்டு, படம் கொஞ்சம் நன்றாகவே ஓடத் தொடங்கியது. இலவச விளம்பரம் அளித்த சேரன், தங்கரின் அடுத்தபடமான "சொல்ல மறந்த கதை"யில் ஹீரோ.

    குமுதத்தில் அழகிக்காக அடித்த அதே ஸ்டண்டை இப்போது மறுபடியும் விகடனில் திரும்ப பள்ளிக்கூடத்துக்காக அடிக்கிறார்களோ என்று தோன்றுகிறது. பள்ளிக்கூடம் படத்தில் பணியாற்றிய அஜயன்பாலா வேற இப்போ விகடனில் தொடர் எழுதிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது :-)

    பதிலளிநீக்கு
  9. //
    லக்கிலுக் சொல்வது:
    குமுதத்தில் அழகிக்காக அடித்த அதே ஸ்டண்டை இப்போது மறுபடியும் விகடனில் திரும்ப பள்ளிக்கூடத்துக்காக அடிக்கிறார்களோ என்று தோன்றுகிறது. //

    Even I feel the same....

    பதிலளிநீக்கு
  10. தாசன், லக்கிலுக், புபட்டின் வந்து கருத்து சொன்ன உங்களுக்கு நன்றிகள். அழகி படத்தின் போது stunt அடிக்க அப்படத்தில் சரக்கு இருந்தது. ஆனால், பள்ளிக்கூடம் படத்தில்? அஜயன் பாலாவின் விகடன் தொடருக்குக் காரணம் நா.முத்துக்குமார் என்று கேள்வி...?

    பதிலளிநீக்கு
  11. படத்தின் தலைப்பு மாறக்கூடாது என்பது எனது விருப்பம்.
    'சிவாஜி The Boss' தலைப்புக்கு தமிழ்த்தலைப்பு என்று வரிவிலக்கு அளித்த கலைஞர் இந்தப்படத்தின் தலைப்புக்கு வரிவிலக்கு அளிக்கமாட்டாரா என்ன? அதைவிட கடந்த தேர்தலில் தங்கர் எந்தப்பக்கம் நின்றார் என்பது தெரியாதா என்ன?

    பதிலளிநீக்கு
  12. அது 'சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி' என்ற படம். திருத்திவிடுங்கள்.

    பதிலளிநீக்கு
  13. நல்லக் கட்டுரை. இதைப் படித்தவுடன், தங்கர், சேரன்கள் மீதான வருத்தங்கள் போக, ஒன்பது ரூபாய் நோட்டைப் படிக்க வேண்டு்ம் என்ற எண்ணமே மேலோங்குகிறது. நன்றி..!

    பதிலளிநீக்கு
  14. வசந்தன், ஆழியூரான் நண்பர்களின் வருகைக்கு நன்றி. வலையுலகுக்கு நான் புதியவன்; இந்த இடுகைக்கு இதுவரை வந்தவர்கள் அதிகம் என்றாலும், பின்னூட்டங்கள் மிகவும் என்னை உற்சாகப்படுத்துகின்றன. பதிவர் பட்டறையில் அறிமுகமான நண்பர்கள்தான் நான் வலைப்பதிய காரணம்; அவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றிகள்.

    வவ்வால் அவர்களின் கருத்துப்படி word verification எடுத்துவிட்டேன்; அதுகூட தெரியவில்லை என்றுதான் சொல்லவேண்டும்....

    ஒன்பது ரூபாய் நோட்டு என்பது ஒரு சம்சாரியின் வீம்பை உணர்த்தும் அருமையான் தலைப்பு. வசந்தன் எண்ணப்படி அத்தலைப்பு மாறக்கூடாது என்பதுதான் அனைவருக்கும் ஆசை. பார்ப்போம் என்ன நடக்கிறது என்று...? வரிவிலக்கு கிடைக்கவேண்டுமே...

    வசந்தன், சிதம்பரத்தில் ஒரு பள்ளிக்கூடம் என்று இரண்டு படங்களின் தலைப்புகளையும் ஒன்றாக இணைத்து எழுதியுள்ளேன்(?)

    வலையுகுக்கு எழுத் வந்த ஐந்தாவது இடகையிலேயே இப்படி ஒரு வரவேற்பு தந்த அனைவருக்கும் மீண்டும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  15. தங்கர் பச்சான் பற்றிய மேலதிக தகவல்களைத் தரமுடியுமா? அவர் பற்றிய தமிழ் விக்கிபீடியாக் கட்டுரை தகவல்கள் அதிகமின்றி மிகச் சிறிதாக உள்ளது.
    kopinath at gmail dot com

    பதிலளிநீக்கு
  16. பெயரில்லாThursday, September 27, 2007 2:07:00 PM

    அறிவுமதி அண்ணனின் ''உள்ளேன் அய்யா''தான் பள்ளிக்கூடமா?
    திரை உலகம் என்றாலே இப்படித்தானா?

    பதிலளிநீக்கு
  17. சிறப்பான தொகுப்பு. எங்கும் படிக்காத விசயங்கள், தொடருங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்

    பதிலளிநீக்கு
  18. இப்ப படம் நல்லாயிருக்குன்னு பேசிக்கறாங்க...

    பதிலளிநீக்கு