வருகை

வாழ்வின் அன்றாட நிகழ்வுகள், நித்தமும் நமக்குக் கற்றுத்தரும் படிப்பினைகள் ஆயிரமாயிரம். ஆனால், நாம்தான் எவற்றையும் சரிவர அவதானிப்பதேயில்லை.

இருந்தும் ஒரு சிறு நிகழ்வொன்றை கவனித்தே ஆகவேண்டியதாயிற்று... பாதிக்கப்பட்டதால்...

ஒன்று-

நேற்று இரவு பத்து மணிக்கு செஞ்சியிலிருந்து சென்னைக்கு பேருந்து ஏறினேன். திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு என்றாலே, எப்போதும் பேருந்துகளில் கூட்டம் பிதுங்கி வழியும்... இப்போதும் விதிவிலக்கில்லை. நின்று கொண்டுதான் பயணிக்க வேண்டியதாயிற்று.

கையில் இரண்டேயிரண்டு பொருட்கள்- ஒரு சிடியும், ஒரு செல்போன் சார்ஜரும்... வேறு எதுவும் பொருட்கள் இல்லாததால் கையிலிருந்தவற்றை பாக்கெட்டில் வைக்காமல் பேருந்தின் லக்கேஜ் கேரியரில் வைத்துவிட்டு நின்றுகொண்டு வந்தேன்.

நடத்துனர்- ''மேல்மருவத்தூரில் கூட்டம் கொஞ்சம் இறங்கும், உட்கார்ந்துக்குங்க...'' என்று டிக்கெட் கிழித்தார். இடையில் பேருந்து திண்டிவனம் தாண்டிய பின் (எல்லாம் பைபாஸில்தான்) ஓர் உணவகத்தில் நின்றது. அடுத்த பத்து நிமிடத்திலேயே ஓட்டுனர் பேருந்தை கிளப்பிவிட்டார்.(ஓசி சாப்பிடு அவ்வளவா நல்லாயில்லையோ?)

தொழுப்பேடு தாண்டியதும் மருவத்தூர் நெருங்குவதால்
சிடியையும், சார்ஜரையும் எடுத்து கையில் வைத்துக்கொண்டால்,
பேருந்தில் இருக்கைகள் எங்கு காலியானாலும் அங்கு உட்காரலாம் என்று தயாரானேன்...

ஆஹா... என்னடா இது, எனக்கு வந்த சோதனை...
எவ்வளவு தேடியும் லக்கேஜ் கேரியரில் சிடியையும், சார்ஜரையும் காணோம்.

இப்படியும் அப்படியும்- அந்தக் கடைசியிலிருந்து இந்தக் கடைசிவரை என்றெல்லாம் தேடியாகிவிட்டது... ம்ஹூம்... எவனோ சரியாக நோட்டம் விட்டு விளையாடியிருக்கிறான்...

பக்கத்தில் இருக்கைகளில் இருந்தவர்களை எல்லாம் தொந்தரவு கொடுத்தும் கேட்டுப் பார்த்தேன்... ஒருத்தனாவது வாயைத் திறக்க வேண்டுமே...

''சார் திரும்பத்திரும்ப டிஸ்டர்ப் பண்ணாதிங்க, அதான் பாக்கலன்னு சொல்லிட்டேன்ல...'' தூக்கத்தில் ஒருவன் குதறினான்...

கல்லுளி மங்கன்கள்...

இரண்டு-

இரவு ஒரு மணி-
பேருந்து அசோக் நகரை கடந்துகொண்டிருந்தது. பத்து வயது பையன் ஒருவன்- ''ஐய்யோ எங்க என் அம்மா அப்பா...'' என்று தூக்கத்தை கைகளால் கசக்கிக்கொண்டு அலறினான். பேருந்தின் முன்னால் இருந்த நடத்துனரை நோக்கி அதிர்ச்சி விலகாமல் முன்னேறினான்.

கூட்டத்தில் ஒருவர் - ''ஏம்ப்பா நீ எங்க எறங்கனும்...?''
''கிண்டியில''
''வண்டி கிண்டி தாண்டி வந்துடுச்சே... இது அசோக் பில்லரு...''
''நான் எங்க அம்மா அப்பாகிட்ட போவணும்'' - பையன் அழுகைக்கு பிள்ளையார் சுழி போட்டான்.
''டேய்...டேய்...அழுவாத, உங்கப்பாவோட செல் நம்பர் இருந்தா சொல்லு...''

நடத்துனர்- ''ஆமாண்டா, உங்க அப்பாவ போன் பண்ணி கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்கு வரச்சொல்லு... அங்க ஒன்ன எறக்கிவிடரேன்...''
பையன்- ''97901.....''
''என்னடா உங்கப்பா நம்பருக்கு லைன் போகமாட்டேங்குது...''
''ம்ஹூம்...''

இதற்கிடையில் வடபழனி சிக்னலை நெருங்கியிருந்த பேருந்தை,
ஆட்டோ ஒன்று வலப்பக்கம் முன்னேறி ஓரங்கட்டப்பார்த்தது...
''அய்யோ எங்க பையன்...'' ஆட்டோவிலிருந்த மொத்த கூட்டமும் அலறியது...

கிண்டியில் இறங்கி, மொத்த குடும்ப உறுப்பினர்களையும் எண்ணிப் பார்த்திருக்கிறார்கள். எண்ணிக்கை குறையவே, அங்கிருந்தே பிடி ஆட்டோவை என்று வந்துவிட்டிருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையை இறங்கும் போதே செய்திருந்தால், ஆட்டோவிற்கு அழுதிருக்க வேண்டாமே...

இப்படி பேருந்திலேயே வழி தவறிய பையனுக்கு உதவியாக,
அவன் அப்பாவின் தொலைபேசிக்கு முயற்சித்தவரும், என் செல்போன் சார்ஜரை திருடிய (எடுத்துக்கொண்ட - தனதாக்கிக்கொண்ட) புண்ணியவானும் ஒரே பேருந்தில்தான் பயணித்தார்கள்...அடையாளம் காண்பதில்தான் பிரச்சனை.

காலம் கெட்டுப்போச்சுன்னு புலம்பினாலும், பிறருக்கு உதவி செய்ய சிலரேனும் இருக்கிறார்கள். எனக்கு மட்டும்தான் இப்படி...

டிஸ்கி-
கையில ஒரு பை கூட இல்ல...
ஒரு செல்போன் சார்ஜரை ஜாக்கரதயா எடுத்தார துப்பில்ல உங்களுக்கு...
நீங்கள்லாம் என்னத்த...

இன்று காலை டிபனுக்கு முன் வீட்டில் கிடைத்த அர்ச்சனை இது.

வருகை

கக்கடைசியாய் தன்னை நவீன இலக்கியவாதி என்று சொல்லிக்கொள்கிற மனுஷ்யபுத்திரனும் திரைப்படத்திற்கு பாட்டு எழுத வந்து சேர்ந்துவிட்டார். கமலின் "உன்னைப் போல் ஒருவன்" படத்தில்தான் பாடலாசிரியராகியிருக்கிறார்.

மனுஷ்யபுத்திரன் இலக்கியவாதியான காலந்தொட்டே திரைப்படத்திற்கு பாடல்கள் எழுத வேண்டும் என்பது அவரது அடிப்படை கனவுகளில் ஒன்று... ஆனால், அது பிரம்மாண்டமான தொடக்கமாக இருக்கவேண்டும் என்று நினைத்தார், அதை உன்னைப் போல் ஒருவனில் சாதித்தும் விட்டார்...

அதேபோல ஸ்ருதிஹாசன் இனி ஏ.ஆர்.ரஹ்மானையும் தாண்டி சிகரங்கள் தொடும் இசையமைப்பாளர், அவரிடம் அவ்வளவு திறமைகள் ஒளிந்திருக்கின்றன... என்று 'உயிர்மை'யிலும் இன்னபிற பத்திரிக்கைகளிலும் பத்திகள் வரலாம்... பொறுத்தருள்க......

இனி திரைப்படத்திற்கு பாட்டெழுத வந்த நவீன இலக்கியவாதிகள் வரிசையில் மனுஷ்யபுத்திரன் பெயரையும் அனுசரித்துதான் போகவேண்டும். அது நா.முத்துக்குமாருக்கு கண்டிப்பாக உள்ளெரிச்சலை உண்டாக்கும்.

உயிர்மையில் நா.மு நூல்கள் பதிப்பிக்கப்பட்ட ஒரு காலகட்டத்தில் தனக்கும் பாட்டெழுத வாய்ப்பும், அறிமுகங்களும் ஏற்பாடு செய்யுமாறு ம.புவின் நச்சரிப்பு முத்துவிற்கு அதிகமாகவே இருந்தது. அதனால்தான் அவர்களின் உறவில் கத்தரி- மன்னிக்கவும் வெட்டறிவாள் விழுந்தது.

ஆனால், தற்போது உயிர்மையிலிருந்து முத்து வெளியேறிவிட்டார் என்பது வேறு செய்தி...

நவீன கவிதைகளில் தன்னெழுச்சி வரிகளை நிரப்பி கட்டற்ற இலக்கியம் செய்து வந்த ம.பு, இனி மெட்டுக்கு எழுதி என்ன செய்யப்போகிறார் என்று தெரியவில்லை...

ஆனால், திரைப்படங்களுக்கு பாட்டெழுதுவது என்பது தனிக்கலை- அதைவிட தனி அரசியல்... அந்த அரசியலில் நா.மு கரைகண்டவர். ம.பு இப்போதுதான் அரிச்சுவடி மாணவர். ஆனால், இலக்கிய அரசியலில் வெற்றிக்கொடி நாட்டியவர். (சல்மாவையே குடும்ப அரசியல் தாண்டி சாதிக்கவைத்தவர் ஆயிற்றே...)

அந்த வழியை அடியொற்றி இப்போதும் தன் மகளிரணி (சல்மா, செல்வி, தென்றல்.......) வாழ்த்துக்களோடு ம.பு என்ன சாதிக்கப்போகிறார் என்று வழுக்கம்போல் பொறுத்திருந்து பார்ப்போம்...?

வருகை

சென்ற வாரம் நான் எழுதியிருந்த தங்கர் பச்சான் பற்றிய எனது இடுகையை உலகெங்கிலுமிருந்து ஏறத்தாழ எழுநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வந்து படித்திருக்கிறார்கள். (உதவி: Ip map track & E-refferer ) அதேபோல் அந்த இடுகைக்கு பத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்கள் மறுமொழிகளையும் பதிந்திருக்கிறார்கள்.

இடுகையை படித்தவர்களது எண்ணிக்கையை; அதாவது, தேன்கூடு மற்றும் தமிழ்வெளி திரட்டிகளில் நமது புதிய இடுகைகள் திரட்டிய பின், நமது வலைப்பதிவிற்கு வந்து படித்தவர்கள் (அல்லது வந்து பார்த்தவர்கள்) எண்ணிக்கை திரட்டப்படுகிறது இல்லையா? அதுபோல் நமது பதிவில் இடுகைகளின் பட்டியல்(archives) பகுதியில் நமது இடுகைகளின் தலைப்புகள் காண்பிக்கப்படும் போது அவற்றைப் படித்தவர்கள் எண்ணிக்கையும் கூடவே மறுமொழியிட்டவர்களின் எண்ணிக்கையும் காண்பிக்கப்பட்டால் வசதியாக இருக்கும் என்பது எனது ஆசை.

நமது வலைப்பதிவிலேயே இந்த எண்ணிக்கைகள் திரட்டப்படும்போது, அது இடுகைகளின் பட்டியல்(archives) பகுதியில் அனைத்து பழைய இடுகைகளின் தலைப்பின் கீழும் தெரியவேண்டும்.

(எ.கா) வலைப்பதிவர்கள் கவனத்திற்கு...; நீங்களும் உதவலாம்...! (50/5)

இப்படி காண்பிக்கப்படும்போது, நாம் இந்த இடுகையை படித்தவர்கள் ஐம்பது பேர்; மறுமொழியிட்டவர்கள் ஐந்து பேர் என்று தானாகவே புரிந்துகொள்ளலாம்.

இப்படி இந்த இரண்டு எண்ணிக்கைகளும் திரட்டப்படும்பொழுது, பின்னாட்களில் யாரேனும் நமது வலைப்பதிவிற்கு வந்து இடுகைகளின் பட்டியல்(archives) பகுதிக்கு வந்தால், குறிப்பிட்ட இடுகையை படித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் மறுமொழியிட்டவர்களின் எண்ணிக்கையைக் கொண்டு குறிப்பிட்ட இடுகையை அவர்கள் படிக்கத் தேர்ந்தெடுக்க வாய்ப்பும் வசதியுமிருக்கும்.

நமது வலைப்பதிவுகளில் இடுகைகளின் மறுமொழி நிலவர எண்ணிக்கை குறிப்பிட்ட இடுகைகளின் கீழே மட்டுமே திரட்டப்படுகிறது.
இது இனிமேல் தமிழ்மணம் மற்றும் தேன்கூடு திரட்டிகளின் மறுமொழி நிலவர எண்ணிக்கைபோல் இடுகைகளின் தலைப்பின் அருகிலேயே நமது வலைப்பதிவிலும் திரட்டப்பட வேண்டும் என்பது எனது ஆவல்.

இடுகைகளை படித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் மறுமொழியிட்டவர்களின் எண்ணிக்கை நிலவரங்களை நமது வலைப்பதிவிலேயே திரட்ட தமிழ்மணம் கருவிப்பட்டை போன்று வேறு கருவிப்பட்டையை வலைப்பதிவல் நிறுவும் வகையில் இந்த ஏற்பாடுகள் இருந்தாலும் நமக்கு ஒப்புதலே.

எனக்கு java, html, xml போன்ற கணினி மொழிகள் தெரியாது நண்பர்களே... உங்கள் உதவியை எதிர்பார்க்கிறேன்; முடிந்தவர்கள் தயவுசெய்து நிரல் துண்டு எழுதி முயற்சித்துப் பாருங்கள், உதவுங்கள்...

வருகை

மூன்றாண்டுகளுக்கு முன்பு சென்னை ஏவிஎம் படபிடிப்பு வளாகத்தில் நெறியாளுனர் தங்கர்பச்சானின் ஒன்பது ரூபாய் நோட்டு படத்தின் ஆரம்பவிழா நடைபெற்றது.(யதேச்சையாக எனக்கும் அவ்விழாவில் கலந்துகொள்கிற வாய்ப்பு கிடைத்தது.)

கிராமிய மணங்கமழ ஆடு, மாடுகள், கோழி, வைக்கோல் போர், கயிற்றுக் கட்டில், கலப்பை, நுகத்தடி போன்றவை அங்கு இருந்தன. கேழ்வரகு கூழ், ஊறுகாய் மிளகாய், அரிசிப்புட்டு என்று விழாவிற்கு வந்த அனைவருக்கும் விருந்தளிக்கப்பட்டது. அந்த இடமே ஏதோ ஒரு சிற்றூருக்குள் நுழைந்துவிட்ட ஓர் உணர்வைஅனைவருக்கும் ஏற்படுத்தியது.

சத்யராஜ்-கதாநாயகன், வித்யாசாகர்-இசை என்று ஆரம்பிக்கப்பட்ட அந்தப்படம் அத்தோடு சரி; என்ன காரணங்களாலோ பிறகு மறக்கப்பட்டது. தமிழ்த்திரையுலகின் முதல் trend setter, இயக்குனர் ஸ்ரீதர் அவர்களை விழாவில் நேரில் பார்க்கிற வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது; சக்கர நாற்காலியில் அழைத்து வந்திருந்தார்கள். விழாவை வாழ்த்திவிட்டு கிளம்பிவிட்டார்.

சத்யராஜ், வித்யாசாகர் என படத்தோடு தொடர்புடைய பிரபலங்கள் தவிர பார்த்திபன், சேரன் போன்றவர்களும் வாழ்த்த வந்திருந்தனர்.
"தங்கர் என்படத்துக்கு ஆங்கிலத்துல ஆட்டோகிராஃப்னு தலைப்பு வச்சுட்டதா வருத்தப்படறாரு; அவருடைய ஒன்பது ரூபாய் நோட்டுலகூட ரூபாய், நோட்டுனு ரெண்டு பிறமொழி சொற்கள் வருது, அதை அவர மாத்தச்சொல்லணும்" என்று சேரன் அடிக்கடி பார்த்திபனிடம் விழாவில்
சொல்லிக்கொண்டிருந்தார்.
இச்செய்தி தங்கரின் காதுக்குப் போயிற்றா என்று தெரியாது(?)

இப்படி மாறுபட்ட கோணத்தில் துவக்கப்பட்ட அந்தப்படத்தை அப்படியே அம்போவென போட்டுவிட்டு தங்கர் ஏனோ சிதம்பரத்தில் ஒரு பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கிவிட்டார்.

இப்போதாவது ஒன்பது ரூபாய் நோட்டுக்கு வாழ்வுகொடுக்க மனம் வந்ததே; வாழ்த்தி வரவேற்போம்.
அவ்விழாவில் அன்று என்னை தங்கரிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு அவரது ஒன்பது ரூபாய் நோட்டு நாவலை படிப்பதற்கு அன்பளிப்பாக வாங்கிக்கொண்டு வந்தேன். (அவர் இனாமாக நாவலை எனக்குத் தந்ததின் மேலதிக விவரங்களை பிறிதொரு நேரத்தில் பார்ப்போம்.)

அன்றிரவே அந்நாவலை படிக்க ஆரம்பிக்க... ஆச்சரியம், ஆச்சரியம்... எம்மண்ணின் மைந்தர்களை நேரில் தரிசிப்பது போல் தங்கரின் எழுத்தில் சந்தித்ததில் எனக்கு பிரமிப்பு... இப்படிக்கூட எங்கள் பக்கத்து மனிதர்களைப் பற்றி எழுதமுடியுமா, எழுதினால் படிப்பார்களா, அது இலக்கியமாகுமா? என்று எனக்குள் கேள்விகள் கேள்விகள்.

230 பக்க நாவலை இரண்டே இரவுகளில் படித்து முடித்தேன்.அந்நாவலில் வரும் மாதவப் படையாட்சி போன்று என் சிற்றூரிலும் மனிதர்கள் உண்டு. அவர்களைப் பற்றியும் இப்படி கதையெழுத வேண்டுமென்ற எண்ணமெல்லாம் எனக்கு அப்போது தோன்றியதுண்டு.

புதுச்சேரி மற்றும் தென்னாற்காடு மாவட்டங்களுக்கு என்று தனி வட்டார வழக்கு மொழி (மதுரைத்தமிழ், நெல்லைத் தமிழ், கோவைத்தமிழ் போல) கிடையாது என்றுதான் அந்நாவலை படிக்கும் வரை நான் நினைத்திருந்தேன்.
"தம்பியார நீ மரவெட்ட மாரி செய்யன் பார்ப்போம்" (பக்-48)

''இப்பறமா அவனுவோ கூட கூடுவியா?" (பக்-52)

''முந்திரிக் கொட்டல்லாம் பொறுக்கிட்டு இஞ்ஞம் ரெண்டு மாசங்கழிச்சி போயண்டா, வேணாண்ணா சொல்லப்போறன். குடும்பத்த அஞ்சி நாழியில பிரிச்சிடலாண்டா, ஒண்ணு சேக்கறதுதான் கஷ்டம். இப்ப எனக்கு எஞ்ஞாடா வந்து கெடக்கு?" (பக்-83)''

இவந்தான் பள்ளிக்கொடத்தார் மவனா?" (பக்-217)


மேற்கண்ட உரையாடல்களை ஒன்பது ரூபாய் நோட்டில் படித்தபின்புதான் எம்பகுதி மக்களின் பேச்சு மொழி வழக்கை உண்ணிப்பாக கவனிக்க ஆரம்பித்திருக்கிறேன். இப்படிப்பட்ட மொழி நடையைக் கொண்டு நாவலை நகர்த்தியிருப்பது தங்கரின் இன்னமொரு இலக்கிய வெற்றி என்றுதான் சொல்லவேண்டும்.


தங்கர் என்கிற திரைக்கலைஞனுக்குள் ஓர் அருமையான இலக்கியவாதி ஒளிந்திருப்பதை அன்றுதான் ஒளிவு மறைவின்றி நான் உணர்ந்தேன். அதனால்தான் இயக்குனர் சேரன் "இவ்வளவு அழகாக எழுதுகிற கலைஞன்'' என்று தங்கரைப்பற்றி சொல்கிறார். (ஆனந்தவிகடன் /செப்-19,2007/ பக்-20)

எல்லாம் சரி, இப்படிப்பட்ட போற்றுதலுக்குரிய அந்த நாவலை தங்கர் எப்படி படமாக்கப்போகிறார்?அதுதான் ஒரு லட்சம் டன் கேள்வி?

ஒன்பது ரூபாய் நோட்டின் கதாநாயகப்பாத்திரம், அதாவது மாதவப் படையாட்சியின் வயது கிட்டத்தட்ட அறுபது. அந்த வயதில் ஒரு கதாநாயகன் என்றால் நம்மக்கள் ஏற்றுக்கொள்வார்களா?(அறுபது வயதிலும் இருபது வயது தோற்றத்தில் நாயகனாக வந்தால் ஏற்றுக்கொள்பவர்கள் நாம் என்பது வேறு விஷயம்!)

இரண்டு: கதையின் நாயகனான மாதவப் படையாட்சி பேருந்தில் பயணிப்பதாகவே பாதி கதைக்குமேல் வருகிறது. அதை சிறப்பாக திரைக்கதை அமைத்து அலுப்புதட்டாமல் தங்கர் எப்படி படம்பிடிக்கப்போகிறார்?
படிக்கும்போது சலிப்புதட்டாத இப்பகுதி திரைப்படமாகும்போது பெரிய ஆபத்திருக்கிறது... எழுத்தில் ஒருவன் நல்லவன் என்று சுலபமாக எழுதிவிடலாம். அதையே திரைப்படமாக்கும்போது அதற்கு குறைந்தபட்சம் நான்கு காட்சிகளாவது வைத்து நியாயப்படுத்த வேண்டும்.

மூன்று: இயக்குனர் சேரன் சொல்வதுபோல் (ஆனந்தவிகடன் /செப்-19, 2007/ பக்-21) தங்கர் தன் படத்தை ''சுருட்டாமல்'' எடுக்கவேண்டும். இதனால்தான் படம் பற்றி நமக்கு பயமாக இருக்கிறது...?

"கதையும் தங்கர் தன் உயிரைக்கொடுத்து அதைப்பதிவு செய்யுற விதத்தையும் பார்த்த பின்னாடி, நான் கோவணம் கட்டி நடிக்கிறதுதான் நியாயம்னு பட்டது. சர்வதேசத்தரம்னு சொல்றோம் இல்லையா, அப்படி ஒரு முயற்சிதான் இந்தப்படம்'' என்று நடிகர் சத்யராஜ் சொல்கிற (ஆனந்தவிகடன் /ஆக-15, 2007/ பக்-282) போதுதான் நமக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது.

"நமக்கு அவுட்டோர் ஷூட்டிங்னா பொள்ளாச்சி, காரைக்குடி, ஊட்டி, கொடைக்கானல்னு போய்த்தான் பழக்கம். இப்படியொரு திசை இருக்குன்னே ரொம்பப் பேர் அறியாமல் இருக்காங்க. முந்திரியும் பலாவும் மணக்கிற இந்தப்பூமியின் சரித்திரம் முதன் முதலாகப் பதிவாகிற சந்தோஷம்'' என்று சத்யராஜ் முன்மொழிவது (ஆனந்தவிகடன் /ஆக-15, 2007/ பக்-283,284) தங்கர்பச்சானின் தாய்மண் பத்திரக்கோட்டையை...

"இவரது படைப்புகள் இவரது சொந்த மண்ணில் நன்கு காலூன்றி நிற்கும் எண்ணற்ற பாத்திரங்களை நமக்கு அறிமுகம் செய்துவைக்கின்றன.மண்ணின் மணம் என்று சொல்லுகிறார்களே, அந்தச் சொற்றொடருக்கு இந்த நாவல் இன்னுமொரு விளக்கமாய் அமைந்துள்ளது. பலாவும் முந்திரியும் மாவும் நெடி வீசுகின்றன." இப்புத்தகத்தின் முன்னுரையில் இவ்வாறு முதுபெரும் எழுத்தாளர் ஜெயகாந்தன் குறிப்பிடுகிறார்.

"ஜெயகாந்தன் அவர்களை நினைத்து நான் அடிக்கடி எனது மாவட்டத்துக்காரர், ஊர்க்காரர் என்று பெருமைப் பட்டுக்கொள்வதுண்டு" என்று தங்கரும் தனது என்னுரையில் உருகுகிறார்.

"இதுவரைக்கும் நாவலே இன்னும் தமிழில் வரவில்லை, இன்தான் எந்தப்பயித்தயக்காரனாவது எழுதவேண்டும் என்று நம்முடைய இலக்கிய ஜாம்பவான்கள் சொல்லி பயமுறுத்திக் கொண்டிருந்தாலும் நாம் ஏன் முதல் பயித்தியக்காரனாகக் கூடாது என்பதால் சோர்வையெல்லாம் விலக்கிக்கொண்டு எழுத உட்காருவேன்.'' என்று எழுதும் தங்கருக்கு இந்தநாவலை முழுவதும் எழுதி -முற்றும்- போட இந்த திரையுலகவாழ்க்கையில், அதுதரும் பக்குவமான மனநிலையில் சுமார் பதினொரு ஆண்டுகள் ஆகியிருக்கிறது.

எழுதப்பட்ட இலக்கிய சிறுகதைகள், நாவல்கள் போன்றவற்றை தமிழ்த்திரையுலகம் சீண்டுவதில்லை என்பது பொதுவான குற்றச்சாட்டு. ஆனால், தனது சிறுகதை ஒன்றைத்தான் முதலில் அழகியாக்கிருந்தார்.

நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள் நாவலை சொல்ல மறந்த கதையில் சொன்னவர், தனது களவாடிய பொழுதுகள் சிறுகதையை பள்ளிக்கூடம் படமாக்கியிருக்கிறார், இப்போது ஒன்பது ரூபாய் நோட்டு.

சேரன் சொன்னதுபோல் ரூபாய், நோட்டு போன்ற சொற்களுக்காக, வரிவிலக்குக்காக படத்தின் தலைப்பு மாற வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால், பணத்துக்காக...வெள்ளநிவாரண நிதியாக முன்பு அரசு வழங்கிய இரண்டாயிரம் ரூபாயை குடும்ப அட்டையுடன் வரிசையில் நின்று வாங்கிய வறுமையாளர்தான் இந்தத் தங்கர்.

இதுமட்டுமன்றி "செம்புலம்" என பதிப்பகம் தொடங்கி அதன்மூலம் தன் புத்தகங்களை வெளியிட்டு ராயல்டி சிதறாமல் பார்த்துக் கொண்டவர்தான் இந்தத் தங்கர்.

ஈழத்தின் புலம்பெயர்ந்த தமிழர்களை கருவாகக்கொண்டு, உலகெங்குமுள்ள அந்தத் தமிழர்களிடமே வசூலித்து ஒரு படம் எடுப்பதாகத் திட்டமிட்டார் தங்கர். ஆனால், எம் தமிழர்கள் இப்போது அதிர்ஷ்டசாலிகள்; தற்போது அத்திட்டம் கைவிடப்பட்டதால், தப்பித்துவிட்டார்கள்.

"இப்போ ஒன்பது ரூபாய் நோட்டு படத்தையாவது கெடுக்காமல் எடுங்க, அதுதான் உங்களை வேறு இடத்தில் கொண்டுபோய் வைக்கும்.பள்ளிக்கூடம் மிகச்சிறந்த கதை. ஆனா, கொடுத்த பணத்தைச் ''சுருட்டாமல்" இருந்திருந்தால், அது இன்னும் நல்ல படமா வந்திருக்கும்." -சேரன். (ஆனந்தவிகடன் /செப்-19, 2007/ பக்-21)

ஆனால், 'உள்ளேன் ஐயா' வின் உணர்வுப்பிரதிதான் பள்ளிக்கூடம் என்று உண்மையாளர்களும், தெரிந்தவர்களும் சொல்கிறார்கள்.
''தமிழன் விளங்குவானா சார்?" என்று தங்கர் பச்சானும்,
''நீங்கள் உத்தமரா தங்கர்?" என்று சேரனும் கடந்த இரண்டு வார ஆனந்த விகடன் பரபரபுக்கும் இந்த பச்சைத்தமிழர்கள் ஊறுகாய்ஆகிவிட்டார்கள்.

தங்கரும் சேரனும் ஒண்ணுக்குள் ஒண்ணு என்று ஆனதே சேரன் கதாநாயகனாவதற்குத்தான்; அதை எதிர்பார்த்துதானே சேரனின் நட்பும் பிற்காலத்தில் தங்கருடன் இறுகியது. ஆனால், பள்ளிக்கூடத்திற்கு வரமறுத்ததற்கு சரியான காரணங்களைத்தான் சொல்லியிருக்கிறார்.

இந்த இடத்தில் தங்கர் ஒன்றை கவனிக்கவேண்டும்: சொல்ல மறந்த கதையில் கதையின் நாயகனாக சேரன் என்றுதான் அவரை அறிமுகம் செய்தார். அப்படியிருக்க பள்ளிக்கூடம் படத்திற்கும் ஒரு கதையின் நாயகனையே தேடிப்பிடித்து அறிமுகம் செய்திருக்கலாமே.

சேரனின் ஸ்டார் வேல்யூ தேவைப்பட்டதால்தான், தங்கர் ''தமிழன் விளங்குவானா சார்?" என்று கொதிக்கவேண்டியதாகிவிட்டது.
தமிழ் தமிழ் என்று மூச்சுக்கு மூச்சு கதறும் தங்கர் தனது நேர்காணலில் கால்ஷீட், சார் என்றுதான் பேச்சு வழக்கில் சாதாரணமாக பேசுகிறார்.

தங்கரும் மற்றவர்களைப்போல சேரன், எஸ்.ஜே.சூர்யா என்று (இயக்குநர்களுமான) கதாநாயகர்களின் பின்தான் திரிந்திருக்கிறார். இவர்களாவது ஓர் இயக்குனரின் துன்பத்தை புரிந்துகொண்டு ஒத்துக்கொள்வார்கள் என்று எதிர்பார்த்திருக்கிறார். அவர்களும் இயக்குனர் முகத்தைவிட கதாநாயகன் முகம்தான் பிடித்திருக்கிறது என்று சொல்லாமல் சொல்லிவிட்டார்கள்.

எஸ்.ஜே.சூர்யா இந்த பள்ளிக்கூடம் படத்தின் கதைக்கு சரியாகயிருக்கமாட்டார் என ஒரு இயக்குனராக தங்கருக்கு ஏன் முன்பே தெரியாதா? அப்படியிருந்தும் அவரது ஸ்டார் வேல்யூவிற்காகத்தானே இவர் அவர் பின்னாடி போயிருக்கிறார்.

''பள்ளிக்கூடம்னா தெரியலைங்க இங்கே. ஸ்கூல்ங்கிற வார்த்தை தமிழ் வார்த்தையாகிப் போச்சுங்க." (ஆனந்தவிகடன் /செப்-12, 2007/ பக்-76) என்று வழக்கம்போல ஊருக்கு கதையளக்கிறார். அதுமட்டுமன்றி தனது பள்ளிக்கூடம் படத்தை தானே ஆஹா ஓஹோ என்று புகழ்ந்துகொள்கிறார். அதையும் பார்த்துக்கொண்டு நாமெல்லாம் சும்மாதான் இருக்கவேண்டியிருக்கிறது. அருமையான கதையை பாதிக்குமேல் திரைக்கதையில் தங்கர் சொதப்பி வைத்திருப்பது ஊரறிந்த உண்மை.

அஜயன் பாலா (நா.முத்துக்குமார் கோஷ்டி) போன்ற இணை இயக்குனர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்களோ? ஒருவேளை தங்கர் தான்தான் படத்தின் "இறுதி முடிவாளர்" என சொல்லிவிட்டாரோ என்னவோ?

இயக்கனர் சீமானுக்கு தங்கர் ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடாததால் அவரும் அமைதியாக நடித்துக்கொடுத்துவிட்டு மட்டும் வந்துவிட்டிருக்கிறார்.
மொத்தத்தில் சொல்ல வந்த உணர்வை இன்னும் சுவையாகவும் முழுமையாகவும் பள்ளிக்கூடத்தில் சொல்லவில்லை என்பதுதான் நமது குறை...

தனது படங்கள் வெளிவருகிற நேரத்தில் மட்டுமே ஊடகங்களைத் தேடி ஓடிவரும் சேரன் மற்ற நேரங்களில் ஆமைபோல் ஒளிந்துகொள்கிறவர்; அவரே வெளிவந்து பெருவிரல் காயத்தோடு விளாசுகிற அளவுக்குத் தங்கர் தனது நேர்காணலில் உளறிக்கொட்டிவிட்டார்.

இப்படி இரண்டு தமிழர்களை அவர்களுக்குள்ளாகவே உள்குத்து வேலைகளில் இறங்க இறக்கிவிடப்பட்டிருந்தாலும் சேரன்தான் வாய்மையில் வெல்வதாக கோடம்பாக்கம் சொல்கிறது. மேலுக்கு வருத்தப்படுகிறார்கள் தங்கருக்காக...
இதுபோன்ற தங்கரைப்பற்றிய மேலதிக விவரம் வேண்டுவோர் தொடர்புகொள்ள அவர்கள் கைகாட்டுவது இசைஞானியை...
போதும் தங்கர்... இளையராஜா, குஷ்பு, நவ்யா நாயர் தற்போது சேரன் என்று நீங்கள் நெறியாள்கையாளர் ஆனபிறகு பட்டதெல்லாம் போதும்...

கூர்ந்து கவனித்தால் இதுவரை யாருமே உங்களின் படைப்புகளை பெரிதாக குறைசொன்னதேயில்லை. ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிகளுக்குக் கொண்டாட்டம் என்பார்கள்; நீங்களும் சேரனும் இரண்டுபட்டடால் தமிழகத்தை பொறுத்தவரை இரண்டு வாரயிதழ்களுக்குத்தான் கொண்டாட்டம்.

போனது போகட்டும்; ஒன்பது ரூபாய் நோட்டை அச்சு அசலாய் அச்சடிக்கிற வேலையில் இனியாவது கவனம் செலுத்துங்கள்... வட்டார கலாசாரத்தையும், பண்பாட்டையும் வெள்ளித்திரையில் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து வெற்றிக்கொடி நாட்டுங்கள்.

இனாமாய் வந்த மாட்டை பல்லை புடிச்சி பார்க்கறதுங்கறது இதானா?
ஒன்பது ரூபாய் நோட்டு புத்தகத்தைச் சொன்னேன்...

வருகை


ஒருவழியாக ஸ்ரீகாந்த் வந்தனா விஷயம் மீண்டும் ஒரு கல்யாணம் என்று முற்றுப்புள்ளிக்கு வந்திருக்கிறது.

இரண்டு குடும்பங்களும் பிரச்சினைகளை பேசித்தீர்த்து ஒன்று சேர்ந்தபின்புதான் இந்த இரண்டாவது தாலி கட்டுகிற விஷயம் நடந்தேறியிருக்கிறது.

ரகசிய காதல், முதல் கல்யாணம், ஊரறிய நிச்சயம் என்று ஃபார்மலான விஷயத்தில் இடறல்...?

ஸ்ரீகாந்த்தின் அம்மா வந்தனாவை தன் மகள்போல நடத்துவதாக புகழ்ந்துதள்ளியிருக்கிறார்.

ஆனால், அதே அம்மா கேட்டுக்கொண்டதால்தான் இன்று இரண்டாவதாகவும் தாலிகட்டியதாக சொல்கிறார்(?)

எல்லாம் சரி, ஸ்ரீகாந்த்+வந்தனா நல்லாருங்க...

இந்த நிழற்படம் இரண்டு வருஷத்துக்கு முன்னாடி (2005) நம்ம கிகசா(ECR) சுங்கச்சாவடியில இலவசமா கொடுத்த ஒரு புத்தகத்துல இருந்தது.

ஸ்ரீகாந்த்துக்கும் வந்தனாவுக்கும் அறிமுகம் கொடுத்த த்ரிஷாவும் இந்த நிழற்படத்துல இருக்கிறதுதான் சிறப்பு.

வந்தனாவும் பாவடை சட்டையெல்லாம் போட்டுக்கிட்டு அப்பவே உங்ககூட நெருக்கமாக எவ்வளவு சந்தோஷமா இருக்காங்க பாருங்க... இனியும் அந்த மகிழ்ச்சி தொடரட்டும்.

வருகை

மூன்று தலைமுறைகளை செலவழித்தபின் இயக்குனர் பீ.வாசுவின் குடும்பத்தில் ஒரு கதாநாயகன் உருவாகியிருக்கிறான்.

திரையுலகில் வாசுவின் குடும்பத்திற்குப் போதுமான அளவு பின்புலம் இருந்தும், மூன்று தலைமுறைகள் அவசியப்பட்டிருக்கிறது.

வாசுவின் அப்பா பீதாம்பரம், எம்.ஜி.ஆர் போன்ற முன்னணி நடிகர்களின் ஒப்பனையாளர். அந்தக்காலத்தில் இந்த பின்புலம் பீ.வாசுவை அதிகபட்சம் முன்னணி இயக்குனராக இருந்த ஸ்ரீதர் அவர்களிடம் உதவிஇயக்குனராக மட்டுமே கரைசேர்த்திருக்கிறது.

உழைப்பாளி, பணக்காரன், மன்னன் கக்கடைசியாக சந்திரமுகி வரை முன்னணி கதாநாயகனின் இயக்குனராக பணிபுரிந்த பின்புதான் இயக்குனர் வாசுவின் மகன் ஷக்தி கதாநாயகனாக முடிந்திருக்கிறது.

வாசுகூட அவசரத்திற்கு ஒருசில படங்களில் நடிகரானவர்தான். அவருக்கே சின்னத்தம்பியின் வெற்றிதான் இதுநாள்வரை சோறு போட்டுக்கொண்டிருந்தது, இப்போது சந்திரமுகி...

இனிமேல் அவர் மகன் ஷக்தி சோறுபோடுவான் என்பது வாசுவின் நம்பிக்கை. இந்த தீர்மானத்தை நாம் நிறைவேற்றுவோமா என்பது பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

ஆமாம், இந்த நீ...ண்...ட முன்னோட்டம் எதற்கு? நிறைய பேர் கோயம்பேட்டிற்கும், சென்ட்ரலுக்கும் தமிழகத்தின் மற்ற பகுதிகளிலிருந்து தங்கள் முகத்தை வெண்திரையில் காட்டிவிட (நடிக்க?) நாள்தோறும் வந்து இறங்குகிறார்களே, அவர்களுக்கு...

அஜித், விக்ரம், ரஜினி, சிவாஜி, எம்.ஜி.ஆர் போன்ற முதல் தலைமுறை வெற்றியாறர்கள் திரையுலகில் நிறைய இருக்கலாம், ஆனால் அந்த வெற்றிக்கு அவர்கள் கொடுத்திருக்கும் விலையையும் இங்கு யோசிப்போம்.

மூன்று தலைமுறையை பின்புலமாக செலவழித்து கதாநாயகனாகியிருக்கும் ஷக்திக்கு இப்போதைக்கு ஓர் *ஓ* போடுவோம்...

வருகை

பல்கலைக்கழகங்கள், தமிழறிஞர்கள், கணினிவியளாலர்கள் சேர்ந்து செய்திருக்க வேண்டிய ஒரு வேலையை நடந்து முடிந்த பதிவர் பட்டறையில் (இலவசமாக) வழங்கப்பட்ட கணிச்சுவடி-கணினியில் தமிழ் எழுதுவது எப்படி?என்கிற சிந்தாநதியின் நூல் செய்திருக்கிறது.

இதற்கு முதலில் அவருக்கு கைதட்டி நம் பாராட்டுதல்களை தெரிவித்துக்கொள்ளலாம்.

எளிய தமிழ், புரியும்படியான விளக்கம், படங்கள் உதவி என்று தேர்ந்த ஓர் எழுத்தாளராக, தொழில்நுட்பத்துடன் தாய்தமிழுக்கு கணினியில் அணிசேர்க்க எழுதியிருக்கிறார் சிந்தாநதி. பட்டறையில் கலந்துகொள்ள முடியாத சூழலிலும் அருமையான பங்களிப்பு இந்தநூல்.

முடிந்த பதிவர் பட்டறையின் பெரும் சாதனை இது. பட்டறையின் மிகப்பிரயோஜனமான விஷயம் இது. ஆனால், இந்த நூலுக்கு பட்டறையில் போதிய வெளிச்சம் கிடைக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

இருந்தாலும், இந்த நூலின் அவசியம் (கணினியில் தமிழ் எழுத) புரிகிறவர்கள், அதன் அருமையை கண்டிப்பாக உணர்வார்கள்.

இப்போதெல்லாம் வலைப்பதிவுகளில் பெரும்பாலான இடங்களில் தமிழில் எழுதுவது, ஒருங்குறி, எ கலப்பை நிறுவுதல் போன்றவை காணக்கிடைத்தாலும், கணினியின் ஆரம்பநிலை ஆர்வலர்கள் மற்றும் கணினி பழக்கமில்லாத தமிழ் ஆர்வலர்களுக்கும் கணிச்சுவடி சிந்தாநதி தந்த வரம்.

அதுமட்டுமன்றி பெரியார் எழுத்து சீர்திருத்தத்தை முழுவதும் காலப்போக்கில் கைவரப்பெற்ற நாம், தமிழ்-99 விசைப்பலகை முறையையும் அதுபோல், முற்றும் முழுவதும் கைவரப்பெற இந்த கைச்சுவடி பக்கத்திற்குப் பக்கம் பரிந்துரை செய்கிறது.

கிட்டத்தட்ட தமிழ்-99 விசைப்பலகை முறையை பரப்புவதை ஓர் இயக்கமாகவே செய்யவேண்டிய காலம் இதுவென்பதை இந்நூல் மறைமுகமாக சுட்டிக்காட்டுகிறது.

அதற்கு எடுத்துக்காட்டாக அஞ்சல் மற்றும் தமிழ்-99 விசைப்பலகை ஒப்பீடுகளை கட்டம்கட்டி சிந்தாநதி தந்திருக்கிறார். அதில் அஞ்சல் விசைப்பலகை மறையின் பாதகங்களையும் வி...ரி...வா...க சொல்லியிருக்கிறார். (ஆரம்ப அவசரத்துக்கு விதிவிலக்குகள் உண்டு)

கணினியில் தமிழ்-99 விசைப்பலகையில் எழுத எ கலப்பை செயலியை (இணைய இலவசம்) நிறுவ இந்த சிறுநூலில் படவிளக்கங்கள் இணைத்திருக்கிறார். அதுமட்டுமன்றி அலுவலக செயலிகளிலும் இதனை பயன்படுத்துதல் எளிது என்கிறார்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்நூல் பதிவர் பட்டறையில் வாசிக்கக்கிடைத்தும், வசதிபடுத்திக்கொள்ளாதவர்கள் இனியாவது வசப்படுத்திக்கொள்வார்களாக.

பட்டறையில் வழங்கப்பட்ட பிரதிகள் போக மீதமுள்ளவற்றை பள்ளிகள், கல்லூரிகள், ஆர்வலர்கள் போன்றோர்களுக்கு வழங்குவது பயனுள்ளாதாக இருக்குமென பதிவுகளில் முன்பே எழுதப்பட்டுள்ளதை வழிமொழிகிறேன்.

வியாபார நோக்கம் சிறிதுமின்றி பதிவர் பட்டறைக்காக கணிச்சுவடியை பதிப்பித்தவர்கள் கிழக்கு: நன்றி.

கடைசிப்பக்கத்தின் கடைசி எழுத்து வரை தமிழ்-99 கட்சிக்காரராக அதன் சாதகங்களை பட்டியலிட்டு வாதாடும் சிந்தாநதி நூலில் முத்தாய்ப்பாக தமிழ்-99 விசைப்பலகை வரைபடத்தை சேர்த்திருப்பது மிகவும் புத்திசாலித்தனம்.

அதன் தொடர்ச்சியாக அன்பர் சிந்தாநதி அவர்களுக்கு ஒரு சிறு பரிந்துரை: தமிழ்-99 விசைப்பலகை தட்டச்சின் நுணுக்கங்களை விரிவாக எழுதிய நீங்கள் செய்யவேண்டிய இன்னொரு விஷயமும் இருக்கிறது...அது தட்டச்சு பயிற்சி ஏடு.

பழையதட்டச்சு பயிற்சி ஏட்டினை ஒப்புநோக்கி, புதிய தமிழ்-99 விசைப்பலகைக்கு அதுபோல் பயிற்சி ஏடு ஒன்று தயாரிக்கவேண்டியது மிகமிக அவசியம். இது பழகுனர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

சிந்தாநதியிடம் இதனை அடுத்து எதிர்பார்ப்பது மிகவும் சரியாக இருக்கும்: தமிழ் வலைப்பதிவர்களும் இதை மறுக்கமாட்டார்கள்.....

தமிழை தமிழால் தமிழாக தட்டச்ச தமிழ்-99 முறையை பயன்படுத்துவோம்.